ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

உலகக் கிறித்தவத் தமிழ்ப் பேரவை

உலகக் கிறித்தவத் தமிழ்ப் பேரவை
பேரவையின் தோற்றம்
தமிழ்க் கிறித்தவரிடையே கிறித்தவத் தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்தி, அவர்தம் ஆர்வத்தையும் படைப்புத் திறனையும் வளர்த்திடவும், கிறித்தவம் தமிழுக்கு ஆற்றியுள்ள அருந்தொண்டுகளை உலகறிய உணர்த்திடவும் வேண்டும் எனும் உயரிய நோக்கங்களைக் கொண்ட கிறித்தவத் தமிழ் அறிஞர்கள், பல்வேறு நிலைகளில் பற்பல தளங்களில் தத்தம் முயற்சியால் சிறு சிறு அமைப்புகளைத் தொடங்கிச் செயல்பட்டு வந்தனர். இத்தகைய உணர்வுடைய மக்கள் இணைந்து ஒரு பேரியக்கம் உருவாக வேண்டும் என்ற அவாவும் அவர்களுக்கு இருந்து வந்தது.
இவ்வகையில், தென்னிந்தியத் திருச்சபையின் தலைமைப் பேராயர் டாக்டர் சாலமன் துரைசாமி அவர்களின் அரு முயற்சியால் பெங்களூர் யுனைடெட் தியாலஜிக்கல் கல்லூரியிலும் மற்றும் பல்வேறு கிராமங்களிலும், நகரங்களிலும் மகாகவி கிருட்டினப் பிள்ளை நினைவாகவும் சுவிசேடக் கவிராயர் சாஸ்திரியார் நினைவாகவும் தமிழ்க் கிறித்தவர்கள் விழாக்கள் எடுத்து வந்திருக்கிறார்கள். 1974 ஆம் ஆண்டு முதல் சென்னையில்,பேராயர் சுந்தர் கிளார்க் அவர்கள் வழங்கிய ஆக்கத்தினாலும் ஊக்கத்தினாலும் சென்னைத் திருமண்டிலத்தின் ஆதரவில் கிறிஸ்தரசர் தமிழ்ப் பேரவைஎன ஓர் இயக்கம் நடைபெற்று வந்தது. மேலும், பேராயர் டாக்டர் சாலமன் துரைசாமி அவர்களுடைய பேருழைப்பின் காரணமாகத் திருச்சி,தஞ்சைத் திருமண்டிலம் மகாகவி அவர்களின் நினைவாகவும்,கவிராயர் அவர்களின் நினைவாகவும் சிறப்புமிக்க விழாக்களை நடத்தி வந்தது. சங்கிலித் தொடர் போன்ற இவ்விழாக்களின் விளைவாக 1981இல் திருச்சியில் பேராயர் சாலமன் துரைசாமி அவர்களின் தலைமையில் உலகக் கிறிஸ்தவத் தமிழ்ப் பேரவைநிறுவப்பட்டது. இப்பேரவைக்குத் தென்னகத்திலும்,உலகின் பிற இடங்களிலும் பணியாற்றி வந்த பேராயர்களும் திருச்சபை ஊழியர்களும் கிறித்தவத் தமிழறிஞர்களும், புரவலர்களாகவும், துணைத் தலைவர்களாகவும், செயலாளர்களாகவும், செயற்குழு உறுப்பினராகவும் அமைந்தனர்.
பேரவையின் நோக்கங்கள்:
இப்பேரவையின் குறிக்கோள்களாகவும் நோக்கங்களாகவும் பின்வரும் செய்திகள் முன்னிருத்திக் கொள்ளப்பட்டன.
· இயல் இசை நாடகம் ஆம் முத்தமிழ் வாயிலாகக் கிறித்துவின் நற்செய்தியை அனைத்து மக்களுடனும் பகிர்ந்து கொள்வது.
· கிறித்தவத் தமிழ் இலக்கியங்களைக் கற்கவும், அவற்றில் திளைக்கவும், திறனாய்வு செய்யவும்,அவற்றைப் பற்றிப் பெருமை கொள்ளவும் தக்க வாய்ப்புகளைத் தமிழ்க் கிறிஸ்தவர்கட்கு ஏற்படுத்திக் கொடுப்பது.
· கிறித்தவ மக்கள் தாய்மொழியாம் தமிழின்பால் கொண்டுள்ள தாழ்வுணர் ச்சியை உதறித் தள்ளிட வேண்டுமெனவும்,தமிழ்க் கவிதைகளையும் உரைநடைக் கோவைகளையும் நன்கு கற்று அவற்றைத் துய்த்து மகிழ்ந்திட வேண்டுமெனவும் அவர்களை அறைகூவி அழைப்பது.
· கடந்த நூற்றாண்டுகளில் கிறித்தவம் தமிழுக்குச் செய்துள்ள தொண்டுகள் குறித்தும், அவற்றைத் தொடர்ந்து ஆற்றி வருகின்றவர்களும் அத்தகைய ஆற்றலுடையவர்களும் இக்காலத்தும் இருக்கின்றார்கள் என்பது குறித்தும் கிறித்தவ மக்களுக்கும் ஏனைய பெருமக்களுக்கும் உணர்த்திடுவது.
· இதுகாறும் வெளியிடப்படாத, தகுதி வாய்ந்த பழைமையான கிறித்தவத் தமிழ்ப் படைப்புகளை அச்சிடுவதுடன், மறைந்த நூல்களை மறுபதிப்பு செய்வதும் மேலும் பழைமையும் அருமையும் வாய்ந்த ஏடுகளைப் பாதுகாத்து வைப்பதற்கு ஆவன செய்வது.
· தமிழில் எழுதும் ஆற்றலுடைய இக்கால கிறிஸ்தவ எழுத்தாளர்களுக்கு, அவர்கள் புதிய காட்சிகளைக் கண்டு எழுதுவதற்கேற்ற வாய்ப்புகளை உண்டாக்கிக் கொடுப்பதுடன், அவர்களால் படைக்கப்படுகிற இலக்கியங்களை வெளியிடுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வது.
· இரட்சணிய யாத்திரிக உரை வெளியிடுவது
· பேரவை சார்பாக இதழ் ஒன்று நடத்துவது
· கிறித்தவத் தமிழ் இலக்கிய ஆய்வு மன்றம் ஒன்று அமைப்பது.
பேரவையின் சாதனைகள்
மேற்சுட்டப்பெற்ற உன்னத நோக்கங்களின் செயல் வடிவங்களாக, இப்பேரவை தனது நீண்ட சாதனைப் பயணத்தில் பின்வரும் அருஞ்செயல்களை நிகழ்த்தியுள்ளது.
1. இப்பேரவை தொடங்கப்பெற்ற ஆறுமாத காலத்திற்குள் தனது முதற் சாதனையாக, முதல் உலகக் கிறித்தவத் தமிழ் மாநாட்டினை 1981 டிசம்பர் 28,29,30 ஆகிய நாட்களில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் சீரோடும் சிறப்போடும் நடத்திக் காட்டியது. மேனாள் திருச்சி-தஞ்சைத் திருமண்டிலப் பேராயர் டாக்டர் சாலமன் துரைசாமி அவர்களின் சீரிய தலைமையில், பேராசிரியர் பொன்னு. ஆ.சத்தியசாட்சி, பேராசிரியர் ப.ச.ஏசுதாசன், முதல்வர் பேராசிரியர் தே.சுவாமிராஜ் முதலியோரின் ஆற்றல்மிகு செயல்திறனால் நிகழ்ந்தேறிய இம்மாநாட்டில் ஆழமான ஆய்வுரைகள் வழங்கப்பட்ட கருத்தரங்குகள், சுவைமிக்க கவியரங்கம், விறுவிறுப்பான பட்டிமண்டபம், இனிய இசைப் மொழிவுகள், கலைநிகழ்ச்சிகள், நூல் வெளியீடுகள், முதுபெரும் கிறிஸ்தவத் தமிழ் அறிஞர்களுக்குப் பட்டமளிப்பு முதலிய பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்நிகழ்வுகளில் பல்வேறு திருச்சபைகளின் பேராயர்கள் உள்ளிட்ட கிறித்தவத் தலைவர்களும் முன்னணிக் கிறித்தவத் தமிழ் அறிஞர்களும், கிறித்தவக் கவிஞர்களும், கலைஞர்களும் பங்கேற்றதோடு, மேனாள் நீதியரசர் மு.மு.இஸ்மாயில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், தவத்திரு. குன்றக்குடி அடிகளார், சென்னை மாநகர மேனாள் செரிபு டாக்டர் பி.எம்.ரெக்ஸ் உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
2. முதல் மாநட்டைத் தொடர்ந்து, திருப்பத்தூர் கிறிஸ்து குல ஆசிரம நிறுவனர்பெரியண்ணன்சவரிராயன் ஏசுதாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவை, சென்னை வேப்பேரி தூய பவுல் மேனிலைப்பள்ளியில் 1982 நவம்பர் 20 அன்று பேரவை சிறப்புற நடத்திக்காட்டிற்று. பெரியண்ணன் அவர்களுடைய பன்முக இலக்கியப் படைப்புகளைப் பற்றிய சிறந்த ஆய்வுரைகள் இவ்விழாவில் வழங்கப்பட்டன.
3. பேரவையின் இரண்டாம் ஆண்டு விழா 1982 டிசம்பர் திங்களில் தஞ்சை லுத்தரன் பெண்கள் மேனிலைப் பள்ளியில் பேரவைப் பொறுப்பாளர்களோடு இணைந்து அருள்திரு. இலாரன்சு அடிகளாரின் செயலூக்கத்தால் சிறப்புற நடைபெற்றது. பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்ற இவ்விழா,பேரவையின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகத் திகழ்ந்தது.
4. பேரவையின் இரண்டாவது மாநாடு, 1984 பிப்ரவரியில் வேலூர் மாநகரின்கண் ஊரீசு கல்லூரி வளாகத்தில்,தெ.இ.தி.வேலூர்த் திருமண்டிலத்தின் ஆதரவுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டின்கண், தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியங்கள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டன. கவியரங்கம், பட்டிமண்டபம், இசைப்பொழிவு, நாடகம் முதலிய பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும் இடம் பெற்ற இம்மாநாட்டில்,தவத்திரு.குன்றக்குடி அடிகளாரால் கிறித்தவத் தமிழ் அறிஞர்கள் பலரும் தமிழ் மாமணி,அருட்கலைஞர்முதலான பல்வேறு விருதுகள் வழங்கிப் பாராட்டப்பட்டனர். இம்மாநாட்டைப் பேராயர் சாம் பொன்னையா அவர்களும் பேராசிரியர் தாவீது அதிசயநாதன் அவர்களும் முன்னின்று நடத்தியது போற்றுதற்குரியது. முந்தின திருச்சி மாநாட்டில் படிக்கப்பெற்ற கருத்தரங்கக் கட்டுரைகள் இம்மாநாட்டில் நூலாக வெளியிடப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
5. இப்பேரவையின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க பெருநிகழ்வாக நடந்தேறிய மூன்றாவது உலகக் கிறிஸ்தவத் தமிழ் மாநாடு,சென்னை,பெயின் மேனிலைப்பள்ளியில் 1986 டிசம்பர் 27,28,29 ஆகிய நாட்களில், தெ.இ.தி. சென்னைப் பேராயத்தின் ஆதரவுடன் பேராயர் சுந்தர்கிளார்க் அவர்களின் சீரிய தலைமையில் பேராசிரியர் பொ.ஆ.சத்தியசாட்சி, பேராசிரியர் ப.ச.ஏசுதாசன், அருள்திரு. டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் ஆகியோரின் வழிநடத்துதலோடு நெஞ்சில் நிலைக்கும் வண்ணம் சிறப்பாக நடந்தேறியது. இம்மாநாட்டில் மிதவை ஊர்வலம், நற்செய்திப் பொழிவுகள், இலக்கியப் பேருரைகள், நுண்கலை நிகழ்வுகள், பட்டிமண்டபம், கவியரங்கு, சிறப்பு விருதுகள் வழங்கல் முதலிய பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இம்மாநாட்டில் பல்வேறு கிறித்தவத் தலைவர்கள், கிறித்தவத் தமிழ் அறிஞர்கள்,தமிழ்ச் சான்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டதோடு,இந்திய நடுவணரசின் அமைச்சர் திரு.ப.சிதம்பரம்,மேனாள் தமிழக நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், கவிஞர் புலமைப்பித்தன், டாக்டர் அவ்வை நடராசன், அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் முதலிய பெருமக்களும் பங்கேற்று அணி சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
6. உலகக் கிறித்தவத் தமிழ்ப் பேரவையின் சார்பாக 1987 இல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டில், அந்நாளைய பேரவைப் பொதுச் செயலர் பொன்னுஆ.சத்தியசாட்சி அவர்களும், பேரவைப் பொருளர் பேராசிரியர் ப.ச.ஏசுதாதன் அவர்களும் கலந்து கொண்டு ஆய்வுரைகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
7. உலகக் கிறித்தவத் தமிழ்ப் பேரவையின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா,தமிழ்க் கிறித்தவ இலக்கிய முப்பெரும் விழாவாகவும் பேரவையின் நான்காவது மாநாடாகவும் மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரி வளாகத்தில் 1991 நவம்பர் 8,9,10 ஆகிய நாட்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருள்திரு.கம்பர் மாணிக்கம் அவர்களின் வழிநடத்துதலில் நடைபெற்ற இவ்விழாவில், நூல் வெளியீடுகள், இலக்கியப் பேருரைகள்,கலை நிகழ்ச்சிகள் இசைப்பொழிவுகள்,சிறப்புக் கருத்தரங்குகள், பாராட்டு நிகழ்வுகள் பட்டமளிப்பு, வழக்காடு மன்றம், தவத்திரு. குன்றக்குடி அடிகளார், தமிழறிஞர் சி.பா.,டாக்டர் ரெக்ஸ் முதலியோர் வழங்கிய முத்திரைப் பொழிவுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் விழாவின் வெற்றிக்கு வழிவகுத்தன.
8. இப்பேரவையின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகவும், இப்பேரவை உலகமெல்லாம் பரவிப் பணியாற்றும் ஓர் உலக அமைப்பு என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் பேரவையின் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு, அமெரிக்கத் திருநாட்டில் நியுயார்க் மாநகரில்,அங்குள்ள கிறித்தவத் தமிழ்க் கோவிலின் ஆதரவுடன், அக்கோவிலின் நிறுவன ஆயர் அருள்திரு அறிஞர் சுந்தர் தேவப்பிரசாது அவர்களின் வழிநடத்துதலில்,அற்புதமான நிகழ்வுகளோடு 1996 ஆகஸ்டு திங்களில் சிறப்புற நடந்தேறியது. பேரவை மாநாடுகட்கே உரிய பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளோடு உலகளாவிய பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க நடைபெற்ற இப்பெருவிழாவில்,பேரவையின் பொறுப்பாளர்களாகத் தமிழகத்திலிருந்து அறிவர் தயானந்தன் பிரான்சிஸ், பேராசிரியர் பொ.ஆ.சத்தியசாட்சி, டாக்டர். சூ. இன்னாசி, டாக்டர் மோசஸ் மைக்கேல் பாரடே, டாக்டர். தே.செல்லையா ஆகியோர் பங்கேற்றனர்.
9. இதனைத் தொடர்ந்து புத்தாயிரமாம் 2000 ஆம் ஆண்டில், சென்னையிலுள்ள மேற்குத் தாம்பரம் தெ.இ.தி. இயேசுநாதர் ஆலய ஒத்துழைப்போடு அவ்வளாகத்தில் ஒரு நாள் நிகழ்வாக,நற்செய்திப் பெருவிழாஒன்றைப் பேரவை நடத்தியது. நற்செய்திப் பணிக்குச் சிறப்பிடம் தரப்பட்ட இவ்விழாவில் நற்செய்திப் பேருரைகள், இலக்கியப் பேருரைகள், பட்டமளிப்பு முதலிய பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன. இவ்விழாவில் சென்னைப் பேராயர் அறிவர் வே. தேவசகாயம் அவர்களும் தமிழ்நாடு இறையியல் கல்லூரி மேனாள் முதல்வர் அறிவர் ஞான இராபின்சன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
10. இவை மட்டுமல்லாது, சென்னை கீழ்ப்பாக்கம் இறையியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கிறித்துமஸ் தொலைக்காட்சி சிறப்புப் பட்டிமண்டபம், சென்னை சாந்தோம் கலைத் தொடர்பு நிலைய அரங்கில் 2008 இல் நடைபெற்ற முப்பெரும் கிறித்தவ அறிஞர்களின் நினைவுப் படைப்பாய்வரங்கம் உள்ளிட்ட பல்வேறு அரிய இலக்கிய இறையியல் நிகழ்வுகளைப் பேரவை நடத்தியுள்ளது.
11. இவையன்றி, பேரவை கடந்த பல ஆண்டுகளாக,தருஎனும் பெயரில் ஓர் காலாண்டு ஆய்விதழை நடத்திவருகிறது. பேரவையின் மேனாள் பொதுச்செயலர் பேராசிரியா; பொன்னு.ஆ.சத்தியசாட்சி அவர்களின் உந்துதலால் அவரையே ஆசிரியராகக் கொண்டு முதலிலும்,பின்னர் முனைவர் மோசசு மைக்கேல் பாரடே, முனைவர் ப.டேவிட் பிரபாகர் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டும்,இடையிடை சற்று தாமதித்து நின்றாலும்,தடையின்றி வந்து கொண்டிருக்கும் இந்த இதழில் கிறித்தவ இலக்கியம்,திருச்சபை, தமிழ்ச் சமுதாயச் சூழல்கள் முதலியவை பற்றிய படைப்புகள் ஆய்வுநோக்கில் எழுதப்பட்டு பலருக்கும் பயன்தந்துவருகிறது. மூத்த தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்கள் பலரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.
12. இந்த அரிய சாதனை நிகழ்வுகளின் வரிசையில்,ஒரு முத்தாய்ப்பான மணிமுடி நிகழ்வாக,பேரவையின் ஆறாவது உலகக் கிறித்தவத் தமிழ் மாநாடு, 2010 மேத் திங்கள் 21,22,23 ஆகிய நாட்களில் தெ.இ.தி.திருச்சி-தஞ்சைத் திருமண்டிலமும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் இணைந்து நடத்தும் மாபெரும் விழாவாகத் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ஆய்வரங்குகள், கவியரங்கம், பட்டிமண்டபம், புத்தகக் கண்காட்சி போன்றவை இடம் பெற்றன.அமைச்சர்கள், துணைவேந்தர்கள்,பேராயர்கள், தமிழ் அறிஞர்கள் பலரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.